‘கொரோனா’ இரண்டாவது அலை… தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி வழங்கிய ரஜினிகாந்த்!
May 17, 2021 / 02:16 PM IST
|Follow Us
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் கடந்த ஆண்டு (2020) தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி எந்த இயக்குநருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பின், இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் தான் ரஜினி நடிக்கப்போகிறார் என்று உறுதிசெய்யப்பட்டது. இந்த படத்தை தயாரிப்பது ‘சன் பிக்சர்ஸ்’ என்பதால், படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரஜினியின் ‘முத்து’ பட வசனம் போல் எப்போ வரும்னு சொல்லாம, வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வந்தது.
படத்தின் டைட்டிலே ‘அண்ணாத்த’ என்று திடீரென அறிவித்து விட்டார்கள். மேலும், படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா என ஹீரோயின்கள் பட்டாளமே நடிக்கிறது. இந்த படத்தின் ரிலீஸுக்காக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில், இப்படத்தை இந்த ஆண்டு (2021) நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனமே ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
கடந்த மே 12-ஆம் தேதி ஹைதராபாத் ஷெடியூலில் ரஜினி சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்டதால், அவர் சென்னைக்கு திரும்பி விட்டார். சமீபத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் “#COVIDSecondWave-க்கு எதிரான போரில் நாம் அனைவரும் சேர்ந்து போரிட வேண்டிய நேரம் இது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிடுவீர்!
பேரிடர் காலத்தில் பெறப்படும் நிதி கொரோனா தடுப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். நன்கொடை – செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும்” என்று கூறியிருந்தார். தற்போது, நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (மே 17-ஆம் தேதி) நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, ரஜினி கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.