2005 ஆம் ஆண்டு ஏ.கே.லோகிததாஸ் இயக்கத்தில் வெளியான “கஸ்தூரிமான்” படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான சாய் பல்லவி, பின்பு சில வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களிடத்தில் நீங்காத இடத்தை தற்போது பிடித்துள்ளார்.
பின்பு 2008 ஆம் ஆண்டு வெளிவந்த “தாம் தூம்” திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர், அல்ஃபோன்சே புத்திரன் இயக்கத்தில் வெளியான மலையாள படமான “பிரேமம்” படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய திரையுலகம் முழுவதும் பிரபலமடைந்தார்.
இந்த படத்தில் ‘மலர் டீச்சர்’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடத்தில் நீங்காத இடத்தை பிடித்தவர், அதைத் தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடிக்க தொடங்கினார். அங்கு அவர் நடித்த படங்களும் வெற்றி பெற்ற நிலையில், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு “தியா” என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார். இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் வெளியிடப்பட்டது.
பின்பு தனுசுடன் “மாரி 2” மற்றும் நடிகர் சூர்யாவுடன் “என்ஜிகே” ஆகிய படங்களில் நடித்து தற்போது ரசிகர்களிடையே தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார் சாய்பல்லவி.
தற்போது தெலுங்கு படத்தில் நடித்துவரும் சாய் பல்லவி, மணிரத்தினம் இயக்கத்தில் ஏற்கனவே நடிக்கவிருந்தாராம்.
ஆம்! 2017 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “காற்று வெளியிடை” படத்தில் இவர்தான் முதலில் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டார். பின்பு இந்த கதாபாத்திரத்தில் இவரைவிட அதிதி ராவ் ஹைதாரி நடித்தால் சரியாக இருக்கும் என்று நினைத்த மணிரத்னம், அதிதியை நடிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.