‘மன்மதன்’ பட தயாரிப்பாளரின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது… இரங்கல் தெரிவித்த சிம்பு!

சிம்புவை வைத்து ‘மன்மதன்’, தனுஷை வைத்து ‘திருடா திருடி’ போன்ற படங்களை தயாரித்த ‘இந்தியன் தியேட்டர் புரொடக்ஷன்’ தயாரிப்பாளர் எஸ்.கே.கிருஷ்ணகாந்துக்கு நேற்று (செப்டம்பர் 30-ஆம் தேதி) மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார். தற்போது, ‘இந்தியன் தியேட்டர் புரொடக்ஷன்’ தயாரிப்பாளர் எஸ்.கே.கிருஷ்ணகாந்த் தொடர்பாக நடிகர் சிம்பு வெளியிட்ட அறிக்கையில் “நல்ல மனிதர்களை இழந்து வருகிறோம்.

‘மன்மதன்’ படம் என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவங்களைக் கொண்டது. என் மீது மிகுந்த அன்பு கொண்டவர் திரு. கிருஷ்ணகாந்த் அவர்கள். ‘மன்மதன்’ படத்தை என் மீது நம்பிக்கை வைத்து இயக்கச் சொன்னவர்.

நீங்க ஸ்கிரிப்ட் பண்ணுங்க.. இயக்குங்க என உற்சாகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையில் என் மீது மிகுந்த எதிர்பார்ப்பைக் கொண்ட நல்ல மனிதர். அவரது மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கலங்க வைக்கிறது. அவரது இழப்பினால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் மடியில் அந்த நல்ல ஆத்மா அமைதி கொள்ளட்டும்” என்று கூறியுள்ளார்.

Share.