திரைப்பட தயாரிப்பாளர் மதுபாட்டில்கள் கடத்தியதாக கைது
July 1, 2020 / 08:38 AM IST
|Follow Us
நாடு முழுவதும் கொரோனா காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் அதை சுற்றி மூன்று மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் அத்தியாவசிய கடைகளை தவிர இதர கடைகள் எதுவும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அரசு அனுமதியுடன் சில கடைகள் மட்டுமே சில மணி நேரங்கள் மட்டுமே இயங்கி வருகிறது.
இதில் மதுபான கடைகள் முழுவதுமாக இந்த நான்கு மாவட்டங்களில் திறப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பலர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை, இதர மாவட்டங்களில் இருந்து வாங்கி சென்னையில் விற்று வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதனால் முக்கிய சாலைகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் பூந்தமல்லி போலீசார் தற்போது ஆலப்பாக்கத்தில் உள்ள ஒரு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்திருந்தார்கள். அப்போது அங்கு சொகுசு கார் ஒன்று போலீஸ் என்று தற்காலிக போர்டு வைத்து வந்தது. சந்தேகத்தின் பேரில் அந்த வாகனத்தை பரிசோதித்த போலீசாருக்கு அனுமதியின்றி மது பாட்டில்களை அந்த காரில் கடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும் அந்த காரில் இருந்ததில் ஒருவர் பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கலைச்செல்வன். மற்றொருவர் மருத்துவத்துறையை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர். தயாரிப்பாளர் கலைச்செல்வன் “தாதா87” என்று படத்தை தயாரித்தவர் ஆவார்.
சுமார் 240 மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தார்கள். இந்த மதுபாட்டில்களை இவர்கள் வேறு மாவட்டங்களில் இருந்து வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
போலீசார் இவர்களை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.