தனுஷின் ‘மாரி 2’ படத்தில் வில்லனாக மிரட்டி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியவர் மலையாள நடிகர் டொவினோ தாமஸ். தற்போது, இவரின் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. ‘மின்னல் முரளி’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குநர் பாசில் ஜோசப் இயக்க உள்ளாராம்.
இதில் டொவினோ தாமஸ் ‘சூப்பர் ஹீரோ’வாக வலம் வரவுள்ளாராம். மேலும், முக்கிய ரோல்களில் குரு சோமசுந்தரம், அஜு வர்கீஸ், ஃபெமினா ஜார்ஜ், சினேகா பாபு, ஷெல்லி நபுகுமார், பிஜுகுட்டன் மற்றும் பலர் நடிக்கவுள்ளனர். ஷான் ரஹ்மான் இசையமைக்கவுள்ள இதற்கு சமீர் தாஹீர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், லிவிங்க்ஸ்டன் மேத்யூ படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார்.
இதனை ‘வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர்’ என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படம் ஒரே நேரத்தில் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் ரெடியாகவுள்ளதாம். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது.