மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்… தேமுதிக சார்பில் வெளியிட்ட அறிக்கை!
October 7, 2020 / 01:28 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் ‘புரட்சிக்கலைஞர்’ விஜயகாந்த். 1979-ஆம் ஆண்டு வெளியான படம் ‘இனிக்கும் இளமை’. இது தான் விஜயகாந்த் அறிமுகமான முதல் படமாம். ஆனால், இதில் இவர் வில்லன் ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு ‘அகல் விளக்கு’ என்ற படத்தில் தான் விஜயகாந்த் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்தார். அடுத்ததாக 1981-ஆம் ஆண்டு வெளியான ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படம் விஜயகாந்திற்கு மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பிறகு இவருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்ததடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது.
விஜயகாந்தின் 100-வது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ 1991-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை ஆர்.கே.செல்வமணி இயக்கியிருந்தார். அதன் பிறகு ‘உளவுத்துறை’ 125-வது படமாகவும், ‘அரசாங்கம்’ 150-வது படமாகவும் விஜயகாந்திற்கு அமைந்தது. ‘அரசாங்கம்’ படத்துக்கு பிறகு ‘மரியாதை, எங்கள் ஆசான், விருதகிரி’ ஆகிய படங்களில் நடித்தார். 1990-ஆம் ஆண்டு பிரேமலதா என்பவரை விஜயகாந்த் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி, நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின், விஜயகாந்த் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துவிட்டார் என்று சொல்லப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவிற்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி இருவரும் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்று விட்டனர். இந்நிலையில், மீண்டும் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக விஜயகாந்த் தரப்பில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். கேப்டனின் உடல் நிலை குறித்து வெளியாகும் வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது.