அடுத்த கமல் என வர்ணிக்கப்படும் விக்ரமிற்கு இன்று பிறந்தநாள், இன்றும் இளமையோடு இருக்கும் விக்ரமிற்கு 54 வயது என்றால் நம்பமுடிகிறதா… ஆனால் அதான் நிஜம்..!
தந்தையின் ஆசையை நிறைவேற்ற சினிமா துறையில் நுழைந்த விக்ரமை சினிமாத்துறை ரத்ன கம்பளம் போட்டு வரவேற்கவில்லை. மாறாக பல ரணங்களை அவருக்கு கொடுத்தது இந்த சினிமாத்துறை. நடிகராக ஜெயிக்க வந்த விக்ரம் வேறு வழியில்லாம் டப்பிங் கலைஞராக மாறினார். அப்போது ஒரு நடிகராக அவரின் மனம் அடைந்திருக்கும் வேதனையை எண்ணிப்பாருங்கள். ஃப்ரேமிற்கு முன்பு ஸ்பாட்டில் அவர் பேசவேண்டிய வசனங்களை, மூடிய அறையில் மைக்கின் முன்பு டப்பிங் பேசிக்கொண்டிருந்தார். மனது வலித்தாலும், டப்பிங் தொழிலை மாஸ் ஹீரோவாக மாறுவதற்கான ஒரு பயிற்சியாக அவர் நினைத்துக்கொண்டார்.
மீரா, ஹவுஸ்ஃபுல் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் விக்ரமிற்கு பாலாவின் சேது மூலமாக பெரிய ப்ரேக் கிடைத்தது. இதுவரை திறக்காத சினிமா கதவை, இந்த படத்தின் மூலம் அடித்து நொறுக்கி திறந்தார் விக்ரம். சேதுவின் கிளைமேக்ஸ் காட்சியும் அதில் வந்த இளையராஜாவின் குரலும் விக்ரமை அனைவரின் மனதிலும் ஆழ பதிய வைத்தது. சேதுவின் மாஸ் வெற்றிக்கு பின் விக்ரம், டபுள் மாஸ் தோல்வியடைந்த விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற படத்தை கொடுத்தார். இந்த தோல்வியால் சுதாரித்துக்கொண்ட விக்ரம், திரைத்துறையில் ஜெயிக்க வேண்டும் என்றால் வித்தியாசம் காட்ட வேண்டும் என்ற கமல் பாணியை பின்பற்ற ஆரம்பித்தார். வெற்றியும் பெற்றார்.
கமலைப்போல மாஸ் படம் ஒன்று, கிளாஸ் படம் ஒன்று என்ற பாணியை பின்பற்றி தொடர்ந்து ஜெயிக்க ஆரம்பித்தார். தில்,காசி,ஜெமினி,அந்நியன்,கந்தசாமி,ஐ போல படங்களை கொடுத்து தனக்கென ரசிகர்கள் வட்டத்தை பெரிதாக்கிக்கொண்டார். ஒருக்கட்டத்தில் விக்ரம் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்து கொண்டே போனதால் அவரின் தரமான சில படங்களும் தோல்வியை தழுவின. அனைத்து படத்திலும் சோதனை முயற்சியை மேற்கொள்ள தொடங்கிய விக்ரம், தன்னுடைய கடந்த படத்தை மிஞ்சும் கதையம்சம் கொண்ட படங்களையே தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார்.
இதன் விளைவாக வணிக ரீதியாக அவரின் படங்கள் வெற்றிப்பெறவில்லை. தற்போது 20 கெட்அப்பில் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தை அவர் மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார். 1999ம் ஆண்டு சேது வெளியானதிலிருந்து இந்த 21 வருடங்களில் விக்ரம் பல விதமான சோதனை முயற்சிகளை செய்து அசத்தியுள்ளார். ஜெயிக்கிறாரோ… தோற்கிறாரோ … அது முக்கியமில்லை தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார், அதுதான் விக்ரம், பீமா படத்தில் பீமனைப் போல வந்த விக்ரம், ஐ படத்தில் உடலை உருக்கி நோயாளியாகவே மாறினார். பற்களை இழந்து, முடிகளை இழந்து, உடலை உருக்கி தென்னகத்தின் Christian Bale என்று அவர் தொடர்ந்து நிரூபித்து வருகிறார். மகன் திரையில் நடிக்க ஆரம்பித்த பின்னும், சினிமாவில் மாஸ் காட்டும் விக்ரம் உண்மையில் சினிமா வெறியன்தான்….! HAPPY BIRTHDAY CHIYAAN…! கோப்ரா படக்குழு விக்ரமனை ஏன் பிடிக்கும் என்பதை ஒரு வீடியோவாக பதிவிட்டுள்ளனர்… சுவாரஸ்யமான வீடியோ பார்த்து மகிழுங்கள்…!