மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா நினைவாக நடிகர் அர்ஜுன் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சிரஞ்சீவி சார்ஜா நடிகர் அர்ஜுனின் சகோதரி மகனாவார்.
கடந்த ஜூன் 7ஆம் தேதி 39 வயதேயான இந்த இளம் நடிகர் மாரடைப்பால் காலமானார். இது அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இவர் 2018 ஆம் ஆண்டு நடிகை மேக்னா ராஜை திருமணம் செய்துகொண்டார். நடிகை மேக்னா ராஜ் தற்போது 4 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
சமீபத்தில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சிரஞ்சீவி சர்ஜாவின் புகைப்படங்களை வெளியிட்டு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் சிரஞ்சீவி சர்ஜா தனக்கு கொடுத்த பெரிய பரிசு இந்த குழந்தை என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து நடிகர் அர்ஜுன் தற்போது சிரஞ்சீவி சார்ஜாவின் நினைவாக அவரது புகைப்படங்களை வெளியிட்டு ஒரு வீடியோவில்” என் இளம் மகனே நீ மனசு சங்கடப்பட்டு அல்லது கோபப்பட்டு இரண்டு மூன்று நாட்கள் எங்காவது சென்றால் அது வேறு. ஆனால் இனி திரும்பி வர முடியாத இடத்திற்கு சென்று எங்களையெல்லாம் தண்டித்து விட்டாய். நான் எப்பொழுது என் கண்களை மூடினாலும் உன் சிரிப்பு முகம் தான் தெரிகிறது. ஒரு சில காலங்களில் உன்னை நாங்கள் மறந்து விடுவோம் என்று நீ நினைத்தால் அது கிடையாது. உன் மரணத்தால் எங்களுக்கு ஏற்பட்ட காயம் என்றுமே அழியாது. நீ என்றுமே எங்கள் இதயங்களில் வாழ்வாய்” என்று உருக்கமாக கூறியுள்ளார்.
மேலும் “உன் தாத்தா உனக்கு சிரஞ்சீவி என்று பெயர் வைத்தார்.அது என்றுமே உண்மையாக இருக்கும். உன் வார்த்தைகள், சிரிப்பு, நினைவுகள், நம் சொந்தம் என்றுமே நிலைத்திருக்கும். நாங்கள் விரைவில் இந்த சங்கடத்தில் இருந்து விடுபட அனைவரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் உண்மையில் உன்னால் மட்டுமே எங்களுக்கு உதவ முடியும். உன்னுடைய குழந்தை வடிவில் மீண்டும் இந்த உலகிற்கு வா! உன்னை கையில் எந்த நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்” என்று அர்ஜுன் மிகவும் உருக்கமாக பதிவிட்டிருந்தார்.
இதற்கு முன்னர் இதேபோல மேக்னாராஜ் தன் பதிவில்” மீண்டும் நீ நம் குழந்தையாக பிறந்து வா உன்னை நான் மீண்டும் கையில் ஏந்த வேண்டும்” என்று கூறினார். சிரஞ்சீவி சார்ஜா மறைந்த சோகத்தில் இருக்கும் அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் இவர்களது குழந்தை எப்போது பிறக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.