நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அடித்தட்டு மக்களின் நிலை அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் ஆரோக்கியம் மிகவும் கவலைக்கிடமானது. இவர்களுக்கு உதவி செய்ய பலர் முன் வரும் நிலையில் அதில் திரைப்பட பிரபலங்களும் உள்ளடங்கும்.
பிரபல குணச்சித்திர நடிகரான சோனு சூட் “அருந்ததி” படத்தில் கொடூர வில்லனாக நடித்தவர் .இவர் கொரோனா காலத்தில் சமீபத்தில்”கர்பேஜோ” என்ற திட்டத்தின் கீழ் பிற மாநிலங்களிலிருந்து சொந்த ஊருக்கு போக முடியாமல் தவித்த மக்களுக்கு உதவி வந்தார். இதைப் பற்றி அவர் கூறியதாவது”வேற்று ஊர்களிலிருந்து சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் குழந்தைகளையும் பெரியவர்களையும் காணும்போது என் மனம் பதைபதைத்தது. இதைப்பற்றி ஏதாவது செய்ய வேண்டும் என்று அப்போது முடிவு செய்தேன்”என்று கூறினார்.
மேலும் அவர் தங்கை கூறியதாவது “என் அண்ணன் பொறியியல் படிக்கும்பொழுது வீட்டிற்கு ஒவ்வொரு முறை பயணம் செய்யும் போதும், ரயில் பெட்டிகளில் கழிவறையின் பக்கத்திலிருக்கும் காலியிடங்களில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். அவர் எப்பொழுதும் எங்கள் தந்தையின் கடின உழைப்பை பார்த்து நடந்துகொள்வார். அதனால்தான் இந்த மக்களின் நிலையை புரிந்துகொண்டு உதவி செய்துள்ளார். எங்கள் பெற்றோர் கூறியதுபோல மக்களுக்கு உதவிசெய்து வாழ்வதே தர்மம் என்பதை இப்போதும் கடைப்பிடித்து வருகிறார்”என்று கூறினார். இவர் மேலும் பல நலத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக தற்போது ஆந்திராவில் தன் மகள்களை மாடு போல் பூட்டி, ஒரு விவசாயி உழவு பார்த்ததை கண்டு பதைபதைத்து அவருக்கு ஒரு டிராக்டர் வாங்கி கொடுத்தார்.
அடுத்த உதவியாக வேலை இழந்து காய்கறி விற்க முற்பட்ட சாப்ட்வேர் இன்ஜினியர் பெண் ஒருவருக்கு தற்போது புதிய வேலை வாங்கி கொடுத்துள்ளார். கொரோனா காரணமாக வேலையிலிருந்து நீக்கப்பட்ட இந்தப் பெண்ணிற்கு அவர் வேலை வாங்கிக் கொடுத்ததை மக்கள் தற்போது பாராட்டி வருகிறார்கள்.
சோனு சூட்டின் இந்த நெகிழ்ச்சி தரும் உதவிகளுக்கு அனைவரும் தங்கள் பாராட்டுகளை குவித்து வருகிறார்கள்.