தமிழ் திரைப் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பது மூலம் அறிமுகமாகி பின்பு புகழ்பெற்ற காமெடி நடிகராக தற்போது வலம் வருபவர் நடிகர் யோகிபாபு.
2016 ஆம் வருடம் வெளியான “ஆண்டவன் கட்டளை” படத்தில் நடித்தது மூலம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற யோகிபாபு, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான “கோலமாவு கோகிலா” மற்றும் “பரியேறும் பெருமாள்” படங்களின் மூலம் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஹீரோவாக நடித்த “காக்டைல்” திரைப்படம் கடைசியாக ஜீ5 எனும் ஓடிடி தளத்தில் வெளியானது.
இவர் நடித்துள்ளா டிக்கிலோனா, ஜெகஜாலக்கில்லாடி, பிஸ்தா ஆகிய திரைப்படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு காத்திருக்கிறது. இவர் நடிக்கவுள்ள சைத்தான் கா பச்சா, சதுரங்க வேட்டை2, அடங்காதே திரைப்படங்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், நின்று கொள்வான், பன்னிக்குட்டி, மண்டேலா, வெள்ளை யானை, கடைசி விவசாயி, கன்னி ராசி, ட்ரிப் ஆகிய திரைப்படங்களின் வேலைகள் நடந்து கொண்டு வருகிறது.
இப்போது யோகிபாபுவின் மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால் இவர் ஒரு படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தால் கூட அதன் போஸ்டரில் இவரது புகைப்படத்தை பெரிதாக வைத்து விளம்பரப்படுத்தி வருகிறார்கள். ஆரம்ப காலகட்டத்தில் இவர் நடித்த படங்களில் சிறுசிறு வேடங்களில் வந்து இருக்கும் இவரை இந்த படத்தில் ஹீரோவாக நடித்தது போன்று சித்தரித்து விளம்பரப்படுத்தி வருகிறார்களாம். இதனால் விநியோகஸ்தர்களும் ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள யோகிபாபு “நான் ஆரம்ப காலகட்டங்களில் திரைப் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளேன் அந்த படங்களை தற்போது வெளியிடும் போது அந்த படத்தின் போஸ்டரில் எனது புகைப்படத்தை பெரிதாக வைத்து விளம்பரம் செய்கிறார்கள். இதன்மூலம் படம் பார்க்க சென்று ரசிகர்கள், உங்களை நம்பித்தான் படத்திற்கு சென்றோம் ஆனால் படத்தில் நீங்கள் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்துள்ளீர்கள் அதனால் நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம் என்று எனக்கு போன் செய்து கூறுகிறார்கள். மேலும் திரைப்பட விநியோகஸ்தர்களும் இது குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்கள். தற்போது கூட தௌலத் படத்தில் நான் சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தேன், ஆனால் நான் ஹீரோவாக இருப்பது போன்று போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். தயவு செய்து இது மாதிரி செய்ய வேண்டாம். என்னை ஹீரோவாக வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் கூட இதனால் வருத்தப்படுகிறார்கள். இதனால் மீண்டும் இதுபோன்ற தவறை யாரும் செய்ய வேண்டாம் என்று கையெடுத்துக் கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன்” என்று வருத்தமாக கூறியிருக்கிறார்.