பிரபல நடிகர் கார்த்தியின் கேரியரில் மிக முக்கியமான படம், அதுவும் அவர் கதையின் நாயகனாக அறிமுகமான படம் ‘பருத்திவீரன்’. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ப்ரியாமணி நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அமீர் இதனை இயக்கியிருந்தார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.
சமீபத்தில், இந்த படத்தை தயாரித்த ‘ஸ்டூடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல்ராஜா மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் அமீர் “‘பருத்திவீரன்’ தொடர்பாகவும், என்னுடைய திரைப்பயணம் தொடர்பாகவும், ஞானவேல்ராஜா கூறிய கருத்துகளில் ஒன்றில் கூட உண்மையில்லை” என்று குறிப்பிட்டு ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
அதன் பிறகு அமீருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன், கரு.பழனியப்பன், சினேகன், சுதா கொங்கரா, பாரதிராஜா என சில திரையுலக பிரபலங்கள் குரல் கொடுத்தனர். இந்நிலையில், நேற்று ‘ஸ்டூடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல்ராஜா தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் “‘பருத்திவீரன்’ பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை.
என்றைக்குமே ‘அமீர் அண்ணா’ என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும், அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான். நன்றி” என்று கூறியிருந்தார்.
தற்போது, இது குறித்து பிரபல இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி வெளியிட்டுள்ள அறிக்கையில் “பிரதர்.. இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது… நீங்க செய்ய வேண்டியது., எந்த பொதுவெளியில எகத்தாளமா உக்காந்துக்கிட்டு அருவருப்பான உடல்மொழியால சேற்ற வாரி இறைச்சீங்களோ… அதே பொதுவெளியில பகிரங்கமா மன்னிப்பு கேக்கணும்..! நீங்க கொடுத்த அந்த கேவலமான, தரங்கெட்ட இன்டெர்வியூ-வை சமூக வலைதளங்களில் இருந்து துடைச்சு தூர எறியணும்…!
அன்னைக்கு கொடுக்காம ஏமாத்திட்டுப் போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும். ஏன்னா… கடனா வாங்குன நிறைய பேருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டியது இருக்கு… அப்புறம் ‘பருத்திவீரன்’ திரைப்படத்தில வேலை பார்த்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பல பேருக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு. பாவம்… அவங்கெல்லாம் எளிமையான குடும்பத்துல இருந்து வந்து வேல பாத்தவங்க.. நீங்கதான், ‘அம்பானி பேமிலியாச்சே…!’ காலம் கடந்த நீதி..! மறுக்கப்பட்ட நீதி!” என்று கூறியுள்ளார்.