‘மெகா ஸ்டார்’ மம்மூட்டியின் பிறந்த நாள்… வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன் – மோகன் லால்!

சினிமாவில் டாப் ஸ்டார்களில் ஒருவராக வலம் வருபவர் மம்மூட்டி. இவரது ரசிகர்கள் ‘மெகா ஸ்டார்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். 1971-ஆம் ஆண்டு வெளியான மலையாள படம் ‘அனுபவங்கள் பாலிச்சக்கள்’. இதில் மம்மூட்டி ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக அறிமுகமானார். ‘தேவலோகம்’ என்ற மலையாள படத்தில் தான் மம்மூட்டி கதையின் நாயகனாக நடித்தார்.

ஆனால், அந்த படம் முழுமையாக முடிக்காததால் ரிலீஸாகவில்லை. அதன் பிறகு பல மலையாள படங்களில் ஹீரோவாக நடித்தார் மம்மூட்டி. தமிழ் திரையுலகில் ‘மௌனம் சம்மதம்’ என்ற படத்தின் மூலம் என்ட்ரியானார். இந்த படம் ஹிட்டானதும், மம்மூட்டிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘அழகன், தளபதி, மக்கள் ஆட்சி, புதையல், மறுமலர்ச்சி, எதிரும் புதிரும், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம், பேரன்பு’ என தமிழ் படங்கள் குவிந்தது.

மம்மூட்டி மலையாளம், தமிழ் மட்டுமில்லாமல் ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 1979-ஆம் ஆண்டு மம்மூட்டிக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரின் மகன் தான் பிரபல நடிகர் துல்கர் சல்மான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று (செப்டம்பர் 7-ஆம் தேதி) மம்மூட்டியின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதில் குறிப்பாக ‘உலக நாயகன்’ கமல் ஹாசன், மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மோகன் லால் மம்மூட்டிக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோ பதிவு வைரலாகி வருகிறது.

 

Share.