ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்குனராக மாறி, பின் தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் இயக்குனர் கேவி.ஆனந்த். முன்னணி ஒளிப்பதிவாளரான பிசி.ஸ்ரீராமின் துணை ஒளிப்பதிவாளராக தன் திரையுலக பயணத்தை ஆரம்பித்தார்.
பின் 1996-ஆம் வருடம் வெளியான “காதல் தேசம்” திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பரிமாணம் எடுத்தார். இதைத்தொடர்ந்து நேருக்கு நேர், முதல்வன், விரும்புகிறேன், பாய்ஸ், செல்லமே, சிவாஜி போன்ற வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
2005ஆம் வருடம் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான “கனா கண்டேன்” படத்தில் இயக்குனராக உருவெடுத்த கேவி.ஆனந்த், தொடர்ந்து அயன், கோ, மாற்றான், அனேகன், கவண், காப்பான் போன்ற வெற்றி படங்களை இயக்கினார்.
தமிழில் உள்ள முன்னணி நடிகர்களுடன் பணிபுரிந்துள்ள இவர், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “திருடா திருடா” படத்தில் பிசி.ஸ்ரீராம் உடன் பணிபுரிந்த போது எடுத்த புகைப்படம் ஒன்றை தற்போது வெளியிட்டு அந்த நாட்களை நினைவு கூர்ந்துள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ளதாவது “ஊட்டியில் “திருடா திருடா” வின் லன்ஞ்ச் பிரேக்கில் எடுத்த புகைப்படம்”. இந்த புகைப்படத்தில் ஒளிப்பதிவாளர்கள் ராம்ஜி மற்றும் பாலசுப்பிரமணியம் இருக்கிறார்கள்.
ராம்ஜி “வல்லா” என்ற படத்திலும், பாலசுப்பிரமணியம் “இரணியன்” என்ற படத்திலும் தங்களது முதல் படத்தில் ஒளிப்பதிவு செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒளிப்பதிவாளர் ராம்ஜி சமீபத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான “பொன்மகள் வந்தாள்”படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். பாலசுப்பிரமணியன் பிதாமகன், ரஜினிமுருகன் போன்ற வெற்றிப் படங்களில் ஒளிப்பதிவு செய்துள்ளார்.