‘பிக் பாஸ் 5’-யில் கலந்து கொள்ளப்போகிறாரா பிரபல நடிகையின் தம்பி?… அவரே வெளியிட்ட வீடியோ!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர். கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார்.

அடுத்ததாக ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5-க்கான முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டிருக்கிறதாம். இதன் ஷூட்டிங்கை இந்த ஆண்டு (2021) ஜூன் மாதம் 25-ஆம் தேதி முதல் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், இந்த சீசனையும் கமல் ஹாசனே தொகுத்து வழங்குவாரா? என்று தெரியவில்லை. ஏனெனில், இப்போது அரசியலில் பிஸியாக இருக்கும் கமல், வரும் தமிழக சட்டமன்ற தேர்தலின் முடிவுக்கு பின்னரே ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது தொடர்பாக யோசிக்க முடியும் என்று சொல்லி விட்டாராம்.

மேலும், கமல் நோ சொல்லவே அதிக வாய்ப்பு இருப்பதாகவும், ஆகையால் இந்த சீசனை தொகுத்து வழங்க பாப்புலர் ஹீரோக்களில் ஒருவரான சிலம்பரசனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சீசன் 5-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். கடந்த சில நாட்களாக, நடிகை தேவயாணியின் தம்பியும், பிரபல ஹீரோவுமான நகுல் ‘பிக் பாஸ் 5’-யில் கலந்து கொள்ளப்போகிறார் என்று தண்டோரா போடப்பட்டது. தற்போது, இது தொடர்பாக நகுல் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் “என்னிடம் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. அப்படியே என்னை அணுகினாலும், நான் என் மகளை விட்டு பிரிந்து ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள்ளே செல்ல மாட்டேன்” என்று கூறியுள்ளார்.

Share.