ஜென்டில்மேன் முதல் எந்திரன் 2.0 வரை – ஷங்கரின் திரையுலகப்பயணம்!
July 31, 2020 / 12:26 PM IST
|Follow Us
தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது ஷங்கர் தான். இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பவித்ரன் ஆகியோருக்கு துணை இயக்குனராக தன் திரையுலக பயணத்தை தொடங்கிய ஷங்கர், 1993 ஆம் வருடம் வெளியான “ஜென்டில்மேன்” திரைப்படம் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
ஜென்டில்மேன் அப்போதைய தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் திரைப்படமாக அமைந்தது. அர்ஜுன் சார்ஜா இந்தப்படத்தில் நடித்திருந்தார். வித்தியாசமான கதைக் தளத்திற்காக பெரிதும் மக்களால் பாராட்டப்பட்ட இந்த திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
இந்தப் படத்தில் தொடங்கி தொடர்ந்து ஷங்கரின் இயக்கத்தில் உருவான 6 படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்பட்ட ஷங்கர், காதலன், இந்தியன், ஜீன்ஸ் போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் தயாரித்து இயக்கிய முதல் திரைப்படம் “முதல்வன்”. மீண்டும் அர்ஜுன் சார்ஜாவின் நடிப்பில் முதல்வன் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.
அடுத்த வருடமே இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்தார்கள். இந்த படத்தை தொடர்ந்து பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ, சமீபத்தில் வெளியான எந்திரன் 2.0 என தமிழ் சினிமாவில் வெளியான பிரம்மாண்ட வெற்றி திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், விஜய் என தமிழின் முன்னணி நட்சத்திரங்களுடன் இவர் பணிபுரிந்துள்ளார்.
2006ஆம் ஆண்டு இவர் தயாரிப்பில் வெளியான “வெயில்” திரைப்படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றது. இவர் இயக்கத்தில் வெளியான “ஜென்டில்மேன்” மற்றும் “அந்நியன்” திரைப்படங்களுக்காக சிறந்த இயக்குனருக்கான தமிழ்நாடு அரசின் மாநில விருதைப் பெற்றார். அதுமட்டுமின்றி “இந்தியன்”, “அந்நியன்”, “வெயில்” மற்றும் “சிவாஜி” ஆகிய திரைப்படங்களுக்காக சிறந்த படத்திற்கான மாநில விருதையும் இவர் பெற்றார். இவை மட்டுமின்றி இவர் 4 பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.
தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் “இந்தியன்2” படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் என்று அனைவருக்குமே தெரிந்த விஷயமாக இருக்கிறது. இவர் திரையுலகிற்கு வந்து தற்போது 27 வருடங்களை நிறைவு செய்கிறார்.