நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அனைத்து துறைகளும் முடக்கப்பட்டது. குறிப்பாக சினிமா துறையில் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது, திரையரங்குகள் மூடப்பட்டது.
இதனால் சினிமாவில் பணிபுரியும் கடைசிகட்ட தொழிலாளிகளுக்கு ஒருவேளை உணவுக்கு கூட கஷ்டம் வரும் அளவிற்கு பாதிப்புகள் ஏற்பட்டது. சில பிரபலங்கள் முன்வந்து அவர்களுக்கு உதவி செய்தாலும் அவை போதுமானதாக இருக்கவில்லை.
தற்போது தமிழக அரசு சில கடுமையான விதிமுறைகளை பின்பற்றி பின்பு படப்பிடிப்பு நடத்தலாம் என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். இதனால் சினிமாத் துறையைச் சேர்ந்த பலரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
செப்டம்பர் 1 முதல் திரைப்பட படப்பிடிப்புகள் சில விதிமுறைகளை பின்பற்றி 75 நபர்களுடன் நடத்த அரசு அனுமதி வழங்கப்பட்டதால், இன்று முதல் பெரும்பாலான திரைப்படத்தின் படப்பிடிப்புகளும் தொடங்கவுள்ளது.
இதையடுத்து தயாரிப்பாளர் சிவா கூறியுள்ளதாவது, 75 குழு நபர்களுடன் படப்பிடிப்புகள் தொடங்கலாம் என்பதால் சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் திரைப்படங்கள் சுலபமாக படப்பிடிப்பு நடத்தலாம், ஆனால் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் இதற்கு கொஞ்சம் கடினம் தான் என்று கூறியுள்ளார்.
அக்னி சிறகுகள் படத்தின் இயக்குனர் நவீன், சென்னையில் எங்களுக்கு ஐந்து நாட்களுக்கான இன்டீரியர் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி உள்ளதால் இப்போது தளர்வுகள் நீக்கப்பட்டதையடுத்து நாங்கள் அதை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.
மேலும் விஜய் சேதுபதி, ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோரது திரைப்படங்களின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாம். இன்னும் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் சுல்தான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் இந்த படப்பிடிப்புகள் தொடங்குவதால் கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகிறதா என்பதை பார்த்துவிட்டு தான் தொடங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
எனினும் தற்போது சுமார் 10 படங்களுக்கு மேல் படப்பிடிப்புகள் தொடங்கவுள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.