காவேரி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!
November 1, 2021 / 10:05 AM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் கடந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
இந்த ஆண்டு (2021) ஏப்ரல் 1-ஆம் தேதி இந்திய திரையுலகின் உயரிய விருதாக கருதப்படும் ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி டெல்லியில் நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி இரவு திடீரென ரஜினி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் வந்ததும் அவரது ரசிகர்கள் பதறி விட்டனர்.
அதன் பிறகு கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி மதியம் காவேரி மருத்துவமனையில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் “நேற்று இரவு தலை சுற்றல் காரணமாக திரு.ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின், அவருக்கு மூளைக்கு செல்லும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கு சிகிச்சை அளித்து சரி செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் திரு.ரஜினி” என்று கூறப்பட்டிருந்தது. தற்போது, ரஜினி நேற்று (அக்டோபர் 31-ஆம் தேதி) இரவு டிஸ்சார்ஜ் ஆகி சென்னையில் இருக்கும் அவரது வீட்டுக்கு சென்று விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.