‘காமெடி’ என்று சொன்னாலே விவேக்கின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் விவேக் பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.
தற்போது, நடிகர் விவேக் நடிப்பில் தமிழில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் ‘இந்தியன் 2’, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ மற்றும் லெஜண்ட் சரவணன் கதையின் நாயகனாக நடித்து கொண்டிருக்கும் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி நடிகர் விவேக் ‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
பின், கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி நடிகர் விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ICU-வில் அனுமதிக்கப்பட்ட விவேக்கிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தார்கள். ஆனால், ஏப்ரல் 17-ஆம் தேதி காலை சிகிச்சை பலனின்றி விவேக் இயற்கை எய்தினார். இந்நிலையில், ஏப்ரல் 16-ஆம் தேதி விவேக் அட்மிட் ஆகியிருந்த மருத்துவமனை வாசலில் வைத்து ‘கொரோனா’ தடுப்பூசிக்கு எதிராக பிரபல நடிகர் மன்சூர் அலிகான் பேசியது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக வடபழனி காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது கமிஷனர் புகார் கொடுத்து வழக்கு பதியப்பட்டது. தற்போது, “கொரோனா தடுப்பூசி போட வேண்டாம் என்று நான் சொல்லவே இல்லை. அதனை போடுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என்று தான் நான் சொன்னேன்” என்று குறிப்பிட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.