வெளியான சுஷாந்த் சிங்கின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்!
June 25, 2020 / 02:53 PM IST
|Follow Us
பாலிவுட் மட்டுமல்லாது பலரையும் சமீபத்தில் சோகத்தில் ஆழ்த்தியுள்ள விஷயம் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை. இவர் கடந்த 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
இவர் தற்கொலைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட நிலையில், பலரும் இவர் மன அழுத்தம் காரணமாக தான் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறியிருந்தனர்.
இவர் மன அழுத்தத்திற்கு பாலிவுட்டில் நடந்த வாரிசு அரசியல் காரணம் என்று ஒரு தரப்பினரும், இவர் தனது காதலியுடன் வந்த பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டார் என்று ஒரு தரப்பினரும் கூறி வந்த நிலையில் இவர் தற்கொலைதான் செய்து கொண்டாரா அல்ல கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
ஒருபக்கம் வாரிசு அரசியல் பற்றி பல பிரபலங்கள் மீது சுஷாந்த்தின் நண்பர்களான சில பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் வசைபாடி வந்த நிலையில், போலீசார் சுஷாந்தின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.
இதில் சுஷாந்த்தின் காதலி என்று கூறப்படும் ரியா சக்கரவர்த்தியிடம் 11 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை முடிவில் இவர் தற்கொலைதான் செய்து கொண்டார் என்றும் கூறப்பட்டது.
எனினும் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பதற்கான சில தடயங்கள் கிடைத்த நிலையில், அவரது பிரேத பரிசோதனை முடிவுக்காக போலீசார் காத்திருந்தார்கள்.
தற்போது வெளியான பிரேத பரிசோதனை முடிவில் இவர் மூச்சு திணறி தான் இறந்தார் என்றும், வெளியிலிருந்து அவரை கட்டாயப்படுத்தியதற்கான எந்த தடயமும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அதனால் இந்த பிரேத பரிசோதனையின் முடிவின் மூலமாக சுஷாந்த் தற்கொலைதான் செய்து கொண்டார் என்பது போலிசாரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும் சிலர் இந்த வழக்கை சிபிஐயிடம் மாற்ற கோரி வேண்டுகோள் விடுத்துள்ளனர். இறந்த சுஷாந்த் சிங் தன்னுடைய மரணத்திற்கான மர்மத்தை அவருடனே எடுத்துச் சென்று விட்டார் என்பது சோகத்திலும் பெரிய சோகமான விஷயம்!