ஓடிடியில் வெளியாகும் ஐந்து மொழி திரைப்படம்: திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி
May 21, 2020 / 09:05 PM IST
|Follow Us
ஓடிடியில் ஐந்து மொழி திரைப்படங்கள் வெளியாவதால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள காரணத்தினால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது மட்டுமின்றி நாடு முழுவதும் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக எந்த புதிய திரைப்படம் வெளியாகவில்லை என்பதால் சினிமா ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த நிலையில் மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கு நீட்டிப்பு இருந்தாலும் நீட்டிப்பு இல்லாவிட்டாலும் திரையரங்குகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என்றும் இன்னும் ஒருசில மாதங்கள் கழித்தே திரையரங்குகள் திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஒடிடி பிளாட்பாரத்தில் புதிய படங்கள் வெளியிட முன்னணி தயாரிப்பாளர்கள் முன் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ஏற்கனவே ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷின் ‘பெங்குயின்’ ஆகிய திரைப்படங்கள் போட்டியில் ரிலீஸாவது உறுதி செய்யபட்டது. அந்த வகையில் தற்போது அனுஷ்கா நடித்த ’நிசப்தம்’ திரைப்படமும் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியிட உள்ளதாகவும் இந்த படத்தை பெரும் விலை கொடுத்து அமேசான் பிரைம் வாங்கி இருப்பதாகவும் கூறப்படுவது.
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் இந்த படம் உருவாகி இருப்பதால் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது ஆனால் இந்த படம் ஐந்து மொழிகளிலும் ஓடிடியில் வெளியாக உள்ளது. மேலும் ஓடிடியில் வெளியாகும் முதல் பான்-இந்தியா திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி கீர்த்தி சுரேஷ் நடித்த ’மிஸ் இந்தியா’ திரைப்படமும் விரைவில் ஓடிடியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. முன்னணி நடிகர் நடிகைகள் நடித்த பல திரைப்படங்கள் ஓடிடி பக்கம் சென்று கொண்டிருப்பதை பார்த்து திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.